பெண்கள் பாதுகாப்பு, பஞ்சப்படி உயர்வு, பதவி உயர்வு நிலுவைத் தொகை

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்கள் கழகத்தின் மதுரை கிளை மாதாந்திரப் பொதுக்குழு கூட்டம், மூட்டா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், பஞ்சப்படியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்கள் கழகத்தின் மதுரை கிளை மாதாந்திரப் பொதுக்குழு கூட்டம், மூட்டா அலுவலகத்தில் உள்ள பேரா.வி.சண்முகசுந்தரம் அரங்கில் நடைபெற்றது.

துணைத்தலைவர் பேரா. டி.கே.ஆர் குணவதி தலைமை தாங்கினார். பேரா.கே.வி. ஆனந்தன் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் முனைவர் என்.பெரியதம்பி கடந்த மாத செயல்பாடுகள் குறித்த அறிக்கையை வாசித்தார். பொருளாளர் முனைவர் வி.பெருமாள் நிதிநிலை அறிக்கையை சமர்பித்தார்.அகில இந்திய ஓய்வு பெற்ற பல்கலை மற்றும் கல்லூரி ஆசிரியர் கழக புரவலர் முனைவர் பா.பார்த்தசாரதி மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஆ.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நாட்டின் மற்றும் மாநிலத்தின் சமூக, கல்வி மற்றும் நலன் சார்ந்த பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

மகளிர் பாதுகாப்பு: தமிழகத்தில் மகளிருக்கு உரிய பாதுகாப்பை அளிக்கத் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். குறிப்பாக, கோவை கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி, தாமதமில்லாமல் கடும் தண்டனை வழங்க வேண்டும்.கல்லூரி மாணவர் நலன்: பல்கலைக்கழகத் (பிரவுன்) திருத்தச் சட்டத்தை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும், குறைந்த கட்டணத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் நலன் கருதி, அந்தச் சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.

பஞ்சப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% பஞ்சப்படி அறிவித்த நிலையில், தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கும் உடனடியாக அதனை அறிவிக்க வேண்டும்.பதவி உயர்வு நிலுவைத் தொகை: மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு, தணிக்கை குறைபாடுகளைக் காரணம் காட்டிப் பல மாதங்களாக வழங்க வேண்டிய பதவி உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.பணி மேம்பாடு மற்றும் ஊதியம்: அரசு உதவி பெறும் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு அரசு கல்லூரிப் பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி மேம்பாடு மற்றும் ஊதிய நிலுவையை நான்கரை ஆண்டுகளுக்கு மேல் தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாக்காளர் திருத்தம்: அனைத்து வாக்காளர்களும் விடுபடா வண்ணம், வாக்காளர் உரிமை திருத்தச் சட்டத்தை இலகுவாக்கித் தேர்தல் ஆணையம் ஆவன செய்ய வேண்டும்.

உலக மகளிர் கிரிக்கெட் கோப்பையை முதல்முதலாக வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பொதுக்குழு பாராட்டு தெரிவித்தது.சேலத்தில் நடைபெற்ற டான்ரெக்டா வெள்ளி விழா மாநாட்டைச் சிறப்பாக நடத்திய சேலம் கிளை மற்றும் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் பி.மாது உள்ளிட்ட ஆட்சிக் குழுவினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தது.கூட்டத்தின் இறுதியில் முனைவர் வி.பெருமாள் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பேராசிரியர்கள் எஸ்.சண்முகசுந்தரம், ராஜேந்திரன், அரவிந்த், லட்சுமணன், சந்திரன், சுப்பிரமணி, செந்தில் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Exit mobile version