தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், மக்கள் எழுச்சியைப் பார்க்கும்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முழக்கமிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாழவந்தான்குப்பத்தில், சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பிரம்மாண்ட திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற அதிமுக மகளிர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் சிறப்புரையாற்றினார். லட்சக்கணக்கான பெண்கள் திரண்டிருந்த அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகமே கள்ளக்குறிச்சியைத் திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த மகளிர் வெள்ளம், எதிரிகளை வீழ்த்தப் புறப்பட்டு வந்திருக்கும் பெரும் படையாகும் என்று புகழாரம் சூட்டினார். “பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்; அத்தகைய வல்லமை படைத்த தாய்மார்கள் அதிமுக பக்கம் இருக்கிறார்கள். நமது ஆட்சி அமைவதை இனி எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் ஆற்றிய உரைக்குப் பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் வெறும் 5 சதவீத வாக்குறுதிகளே நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் கூறுவது அப்பட்டமான பொய் என்று சாடினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கியதே அதிமுக ஆட்சிதான் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் நலனுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக் கொண்டு வந்தது முதல், தற்போது ஸ்டாலின் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டியது வரை அனைத்தும் அதிமுகவின் சாதனைகளே என்றார். “நாங்கள் பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைப்பதையே தனது சாதனையாகச் சொல்லிக்கொள்கிறார்” என்று அவர் எள்ளி நகையாடினார்.
திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், கனிமொழியின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர் முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது வேதனைக்குரியது என்றார். பாலியல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றங்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், சமூக நலத்துறை அமைச்சரே 6,999 போக்சோ வழக்குகள் பதிவானதைப் பெருமையாகப் பேசுவது வெட்கக்கேடானது என்றார். அமைச்சர்கள் பெண்களை ‘ஓசி பஸ்’ என்று இழிவுபடுத்துவதாகவும், கள்ளச்சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்காமல் முதல்வர் சினிமா பார்ப்பதிலும் சைக்கிள் ஓட்டுவதிலும் மும்முரமாக இருப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, “ரேஷன் கடையில் சர்க்கரை இல்லை, கேஸ் மானியம் இல்லை, கல்விக்கடன் ரத்து இல்லை, நீட் ரத்து என்பதும் வெறும் காகிதத்தோடு முடிந்துவிட்டது” என்றார். திமுகவில் வாரிசு அரசியல் மட்டுமே கோலோச்சுவதாகவும், அதிமுகவில் மட்டுமே கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ போன்ற சாதாரண ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயர்ந்த பதவிகளைப் பெற முடியும் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஏழை எளிய மக்களுக்கும், பட்டியலின மக்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், நிலம் இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி வீடு கட்டித் தரும் என்றும் உறுதி அளித்தார். நிறுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும், மணமக்களுக்குப் பட்டுச் சேலை, வேஷ்டி மற்றும் ஆண்டுதோறும் தீபாவளிக்கு பெண்களுக்குப் பட்டுச் சேலை வழங்கப்படும் என்றும் புதிய வாக்குறுதிகளை அள்ளி வீசினார். தோல்வி பயத்தால் தற்போது கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கத் தொடங்கியுள்ள திமுக அரசு, கடந்த நான்கு ஆண்டுகளாக அதை ஏன் வழங்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அதிமுகவை வெற்றி பெறச் செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

















