கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு, திமுக சின்னம் பொறித்த கருப்பு சிகப்பு வண்ணத்தில் புடவை கொடுத்து, தஞ்சை மாநாட்டுக்கு அனுப்பி வைத்த மக்கள் நலப் பணியாளர்கள், அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு :-
நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் இன்று சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பல்வேறு கிராமங்களில் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கும் மகளிர்க்கு திமுக சார்பில், உதயசூரியன் சின்னம் பொறித்த கருப்பு சிகப்பு வண்ணத்திலான புடவைகள், கிராம ஊராட்சியின் தற்காலிக அரசு பணியாளர்களான மக்கள் நல பணியாளர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புடவைகளை அணிந்தபடி பெரும்பாலான ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. திமுக சார்பில் தஞ்சையில் நடைபெற உள்ள மகளிர் மாநாட்டுக்காக தொடர்ந்து அவசர அவசரமாக கூட்டத்தை நிறைவு செய்தனர். கிராம ஊராட்சிகள் வாசலில் அரசு பேருந்துகளில் திமுக கொடிகளை கட்டியபடி, பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பல்வேறு கிராமங்களில் திமுக மாநாட்டுக்காக மகளிர் அழைத்துச் செல்லப்பட்டதால் குறைந்த அளவிலான பொதுமக்கள் பங்கேற்றனர். திமுக சார்பில் நடைபெறும் மகளிர் மாநாட்டுக்கு அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
