மைக்ரோசாப்டின் விண்டோஸ் சேவையில் ஏற்பட்ட உலகளாவிய செயலிழப்பு, இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவைகளை கடுமையாக பாதித்தது. குறிப்பாக செக்-இன் மற்றும் பிற கணினி முறைகள் செயலிழந்ததால், பல விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் சிக்கித் தவித்தனர்.
வாரணாசி விமான நிலையத்தில் முதலில் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. செக்-இன் அமைப்பு முடங்கியதால், விமான புறப்பாடுகள் தாமதமடைந்தன. கணினி கோளாறுக்குக் காரணமாக விண்டோஸ் சேவை செயலிழப்பு என்று விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதனையடுத்து ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்திலும் நிலைமை மோசமடைந்தது. பல மணி நேரம் தகவல் இல்லாமல் காத்திருந்த பயணிகள், விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழல் உருவானது. பயணிகளின் எதிர்ப்பை சமாளித்த ஊழியர்கள், கோளாறு சரிசெய்யப்படுவதாகவும், மாற்று ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
பெங்களூரு மற்றும் டில்லி விமான நிலையங்களிலும் இதேபோன்ற தாமதங்கள் பதிவாகின. பெங்களூருவில் மட்டும் 42 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விமான நிறுவனங்கள், பயணிகள் பயணத்திற்கு முன் சமீபத்திய அறிவிப்புகளைச் சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
















