வேலம்மாள் ஸ்டேடியத்தில் டிஎன்பிஎல் நடக்குமா ? டிஎன்சிஏ தலைவர் விளக்கம் – ஏமாற்றத்தில் மதுரை ரசிகர்கள் !

மதுரை : புதிதாக திறக்கப்பட்ட வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தில் டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்விக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் ஸ்ரீனிவாசராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி திறந்து வைத்துள்ள இந்த மைதானம், தென் மாவட்டங்களில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் நவீன பிட்ச், மின்விளக்குகள், வீரர்கள் ஓய்வறைகள், டிஜிட்டல் ஸ்கோர் போர்டு, 15 ஆயிரம் பேர் அமரக்கூடிய இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்ததாக தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மைதானமாக மதுரை வேலம்மாள் ஸ்டேடியம் உருவாகியுள்ளது. இதனால், எதிர்காலத்தில் ரஞ்சி மற்றும் டிஎன்பிஎல் போன்ற போட்டிகள் இங்கு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது.

இந்நிலையில், டிஎன்சிஏ தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீனிவாசராஜ், மதுரை மைதானம் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

அவர் கூறியதாவது: “வேலம்மாள் மைதானத்தில் டிஎன்பிஎல் போட்டிகளை நடத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இதுவரை அந்த மைதானம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைக்கப்படவில்லை. இணைக்கும் நடவடிக்கைகள் முடிந்த பின்பே ரஞ்சி அல்லது டிஎன்பிஎல் போட்டிகள் குறித்து முடிவு எடுக்கப்படும்,” என்றார்.

மேலும், மதுரையில் உள்ள வேலம்மாள் மைதானத்திலும், கோவையில் அரசு கட்டும் புதிய மைதானத்திலும் சர்வதேச போட்டிகள் நடத்த வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த தகவல் வெளியாகியதும், தென் மாவட்ட கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Exit mobile version