பலி வாங்குமா சிதிலமடைந்த சுற்றுச்சுவர்? ராமநாதபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விபத்து அபாயம்

ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில், நகராட்சி அலுவலகத்திற்கு நேர் எதிரே அமைந்துள்ள அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் பாதுகாப்பு தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் பல ஆண்டுகள் பழமையானது என்பதால், போதிய பராமரிப்பின்றி ஆங்காங்கே ஆழமான விரிசல்கள் ஏற்பட்டு, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் மூக்கிற்கு நேரிலேயே இந்த ஆபத்து நிலவியும், இதுவரை எவ்வித சீரமைப்பு நடவடிக்கையும் எடுக்கப்படாதது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அப்பாவி மாணவர் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இத்தகைய சம்பவங்களுக்குப் பிறகாவது விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய கல்வித் துறையும், உள்ளாட்சி நிர்வாகமும், ராமநாதபுரம் நகராட்சிப் பள்ளியின் இந்த அபாயகரமான சூழலைக் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. இந்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட ஏழை எளிய வீட்டு மாணவர்கள் கல்வி பயின்று வரும் சூழலில், விளையாட்டு இடைவேளையின் போதும், பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும் போதும் மாணவர்கள் இந்தச் சுவரை ஒட்டியே நடமாடுகின்றனர். பலத்த காற்றோ அல்லது மழையோ பெய்தால் இந்தச் சுவர் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழலாம் என்ற அச்சத்தில் பெற்றோர்கள் உள்ளனர்.

இது குறித்துப் பெற்றோர்கள் கூறுகையில், “எங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பான சூழலில் படிக்க வைக்கவே அரசுப் பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால், பள்ளி வளாகமே விபத்துக்கூடமாக இருப்பது வேதனை அளிக்கிறது. கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்,” என வலியுறுத்துகின்றனர். வெறும் பெயரளவுக்குப் பள்ளிகளுக்கு வர்ணம் பூசுவதை விட, இது போன்ற சிதிலமடைந்த சுற்றுச்சுவர்கள் மற்றும் பழைய கட்டிடங்களை அடியோடு அகற்றிவிட்டு, புதிய மற்றும் உறுதியான கட்டுமானங்களை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். விபத்து நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விடுத்து, முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு மாணவர்களின் உயிரைக் காக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி ஆணையர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version