“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால், முதல்வருக்கு எல்லையற்ற அதிகாரம் வந்துவிடுமா?” என மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தரிசனம் செய்த பிறகு, திருநெல்வேலியில் பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரனின் வீட்டிற்கு சென்ற அவர், அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :
“இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொருவரின் அதிகார வரம்பையும் தெளிவாக வரையறுத்துள்ளது. முதல்வருக்கு பெரிய அதிகாரங்கள் உள்ளன. ஆனால், அவற்றை முறையாக பயன்படுத்தினால் தான் மக்களுக்கு நன்மை ஏற்படும்.
ஒரு மாநிலத்தின் முதல் குடிமகனாக கவர்னருக்கு சில முக்கியமான அதிகாரங்கள் உள்ளன. அந்த அதிகாரங்கள் கூட வேண்டாம் எனச் சொல்வது சரியான அணுகுமுறை அல்ல. மதச்சார்பற்ற தன்மை என்பதே, யாரது நம்பிக்கைக்கும் புண்படாத வகையில் செயல்படுவதே.
கேரள வழக்கில் உச்ச நீதிமன்றம், துணைவேந்தர் நியமிக்க கவர்னருக்கே அதிகாரம் என கூறியுள்ளது. நானே காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி செய்யும் நான்கு மாநிலங்களில் கவர்னராக பணியாற்றியுள்ளேன். அங்கு இதுபோன்ற பிரச்னைகள் எழவில்லை.
முதல்வர், கவர்னரின் அதிகார வரம்பில் வரக்கூடாது என சொல்வது போலவே, கவர்னரின் அதிகார வரம்புக்குள் முதல்வரும் வரக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் எல்லா அதிகாரங்களும் அவருக்கே எனக்கூற முடியாது. அப்படியெனில் பிரதமருக்கும் எல்லா அதிகாரங்களும் உண்டா ?” என கேள்வியெழுப்பினார் கவர்னர் ராதாகிருஷ்ணன்.