தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பாக நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழக முதல்வர், தமிழ்நாட்டின் வளர்ச்சி எனது ஒரு கண் என்றால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனது மறு கண். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக விளங்கி வருகிறது என கூறினார். ஆனால் அவரது கூற்றுக்கு மாறாக அவரது சொந்த மாவட்டத்திலேயே ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கடந்தாண்டு திருவாரூர் தேரோடும் வீதிகளில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் வேரோடு பெயர்த்து எடுக்கப்பட்டு, அந்த பகுதியில் சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளன. அப்போதே அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் மீதமுள்ள இடங்களில் மரங்கள் நடத்தப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் உறுதி அளித்ததன் பெயரில் சாலை விரிவாக்கம் செய்ய அப்பகுதி மக்கள் ஒப்புக் கொண்டனர். ஆனால் சாலை விரிவாக்கம் செய்த பிறகு ஒரு இடத்திலும் மரங்கள் நட வில்லை. இதே போல புது தெரு பகுதியில் இருந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு, அங்குள்ள குளத்தின் அளவை குறுக்கி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சாலை முடிவு வீட்டில் வாசல் வரை கொண்டுவரப்பட்டு, தார் சாலை போடப்பட்டது. தற்போது துர்காலயா சாலை பகுதியில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதற்கு பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் அவர்களது எதிர்ப்பை மீறி மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பொதுமக்களின் வீட்டின் வாசல் வரை தோண்டி விரிவாக்கம் செய்யும் அதிகாரிகள், ஆளும் கட்சியினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்ளுக்கு இடைவெளி விட்டு செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து திருவாரூர் பகுதி பொதுமக்கள் கூறும் போது…திருவாரூரை சுற்றி இருக்கும் பகுதிகளில் மழை பெய்தாலும் திருவாரூரில் மழை பெய்யாது. இதற்கு முக்கிய காரணம் இங்கிருந்து மரங்கள் வேரோடு அகற்றப்பட்டன. 1975 , 1980 காலகட்டத்தில் சோலை வனமாக இருந்த திருவாரூர் தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டு தற்போது ஆகாயத்தில் இருந்து பார்க்கும்போது மரங்கள் இல்லாத நகரமாக மொட்டையாக காட்சியளிக்கிறது. மக்களுக்கு தேவையான சாலையை போடுவதற்காக சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்களை வெட்டும் அரசு, மக்களுக்கு தேவையான காற்றை தரும் மரங்களை வெட்டி விட்டால் காசு கொடுத்து சுவாசிக்கக் கூடிய நிலை ஏற்படும். மரங்களை இவ்வாறு எடுத்துவிட்டால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதுகாக்கப்படும்..? இதற்கு ஒரு முதல்வர் நல்ல முடிவு எடுக்க வேண்டும். இந்த சாலை நகர் பகுதிக்குள் அமைந்துள்ளதால் மரங்களை வெட்டாமல் தடுப்பு அமைத்துவிட்டு அதனை சுற்றி சாலை விரிவாக்கம் செய்திருக்கலாம் என பகுதி மக்கள் கூறுகின்றனர். இயற்கையோடு இணைந்த வளர்ச்சி தான் நம்மை காக்கும் அது எதுவுமே இந்த ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை. சாலை ஓரத்தில் உள்ள மரங்களை கூட வெட்டி சாய்த்து இருப்பதற்கு இப்பகுதி மக்கள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். குளிர்காலத்தில் மரங்களை வெட்டி சாய்த்திருக்கின்றனர். ஆனால் வெயில் காலத்தில் இந்த பகுதியில் இருக்கவே முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தும். இது பற்றி அதிகாரிகளும் முறையிட்டும், மரங்களை வெட்டுவதற்கு தடுப்பதற்கு முயற்சி செய்தால், உங்களுக்கு என்ன பிரச்சனை உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறுகின்றனர். காரில் ஏசி போட்டு செல்லும் அதிகாரிகளுக்கு இது பற்றி தெரியாது. ஆனால் சாலையில் நடந்து போகும் மக்களுக்கு இந்த வெயிலை எப்படி எதிர் கொண்டு போகப் போகிறார்கள். இந்த மரத்தை வெட்டி எடுக்கும் திமுக அரசு இந்த பகுதியில் ஒரு மரத்தை நட்டு வைத்தது கிடையாது. ஆனால் இந்த மரத்தை வெட்டி சாய்கின்றனர். 40 வருடமாக இங்கிருக்கும் மக்கள் யாராவது வந்து அரசிடம் முறையிட்டார்களா.? இந்த பகுதி வந்து நெருக்கடியாக இருக்கிறது விரிவாக்கம் செய்யுங்கள் என்று கூறினார்களா.?நான்கு மாதத்துக்குள் சாலை பணியை அவசர அவசரமாக போட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர்..இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது. .சாலை விரிவாக்கம் செய்யும்போது மரங்களை வெட்டுவது இயல்புதான். மரங்களை வெட்டுவதற்கு முன் ஆர் டி ஓ தாசில்தார் ஆகியோர் ஆய்வு செய்த பின்னர் கிரீன் கமிட்டியிடம் அனுமதி பெற்று தான் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. நகர் பகுதியில் மீண்டும் மரங்கள் நடுவதற்கு வாய்ப்பு இல்லை என்றார்.
















