சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளார் எனும் செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 27ஆம் தேதி, நடிகர் விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் இணையப் போகிறார் என்ற தகவல் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
செங்கோட்டையன் அண்மையில் அதிமுக பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் எட்டப்பாடி பழனிசாமிக்கு காட்டிய அதிருப்தி காரணமாக கட்சியில் பெரும் அதிர்வலை ஏற்பட்டது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என 10 நாள் அவகாசம் அளித்த அவர், அதை மீறியதால் எடப்பாடி பதவி நீக்கம் செய்து, பின்னர் கட்சியிலிருந்தே நீக்கினார்.
இதற்கிடையில் செங்கோட்டையன் தேவர் ஜெயந்தி விழாவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்துக்கு வழிவகுத்தது. இதையடுத்து, அவர் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதையே அவரது ஆதரவாளர்கள் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைவார் என வெளியாகிய தகவலுக்கு அவர் எந்தவித விளக்கமும் தரவில்லை. பத்திரிகையாளர்கள் தொடர்பு கொள்ள முயன்றபோதும் அவர் பதில் அளிக்கவில்லை. “செங்கோட்டையன் இப்போது எந்த முடிவும் எடுத்திருக்கவில்லை; நிர்வாகிகளையும் சந்திக்கவில்லை” என அவரது உதவியாளர்கள் மட்டுமே கூறினர்.
இந்த பரபரப்புக்கு பதிலளிக்க தவெக இணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் இன்று சந்தித்த பத்திரிகையாளர்கள், “செங்கோட்டையன் தவெகவில் இணைவார் என தகவல் வருகிறது. இதற்கு உங்கள் பதில்?” என்று கேட்டனர். அதற்கு அவர், “மற்ற விஷயங்களைப் பற்றி அப்புறம் பேசலாம்…” என்று கூறி நேரடி பதிலளிப்பதை தவிர்த்தார்.
இதனால் செங்கோட்டையன் தவெகவில் இணைகிறாரா என்ற கேள்வி இன்னும் பதிலில்லாமல் உள்ளது. அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் குறித்து மேலும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
