அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கு அதிமுக எம்.பி. எம். தம்பிதுரை பதிலளித்துள்ளார்.
இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, “தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல், தமிழ் பற்று குறித்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அப்படியிருக்க, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணனுக்கு திமுக சார்பில் வாக்களித்திருக்க வேண்டும். பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு தமிழருக்கு ஆதரவு தராமல் விட்டது வருத்தமளிக்கிறது” என்றார்.
மேலும், “சிபி ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த பின்புலம் கொண்டவர் என்று திமுக விமர்சிக்கிறது. ஆனால் இதே ராதாகிருஷ்ணன், 1998ல் திமுக ஆதரவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர். அப்போது வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர்ஜோஷி ஆகியோரும் ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தைச் சேர்ந்தவர்களே. அப்போது ஆதரவு தந்த திமுக, இன்று அதே காரணத்துக்காக ஆதரிக்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறினார்.
அதிமுக நிலையைப் பற்றி கேட்கப்பட்ட போது, தம்பிதுரை, “அதிமுக என்றால் அது எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் உள்ளது. எம்.பி. தர்மர் அதிமுகவில் இருந்து, தமிழர் என்பதற்காக சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளித்துள்ளார். அதிமுக கட்டுக்கோப்பான இயக்கம். பொதுக்குழு, செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை மீறி எடப்பாடி பழனிசாமி செயல்படுவதில்லை” என்றார்.
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கு அவர்,
“இன்று கூட நாடாளுமன்றத்தில் அமித்ஷாவை சந்தித்தேன். அப்போது செங்கோட்டையன் அவரை சந்தித்தது குறித்து எனக்கு எதுவும் கூறப்படவில்லை. நானும் கேட்கவில்லை. அவர் மாற்றுக் கட்சித் தலைவர்களை சந்தித்தாரா என்பது பற்றியும் எனக்கு தகவல் இல்லை. ஆதாரமற்ற விஷயங்களைப் பற்றி கருத்து சொல்ல முடியாது. எனவே அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கும் நான் பதில் அளிக்க இயலாது” எனத் தெரிவித்தார்.
















