தீபாவளியன்று மழை பெய்யுமா ? வானிலை ஆய்வாளர் வெளியிட்ட கணிப்பு !

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், பண்டிகை நாளில் மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி நாளில் பெரும் மழை பெய்யாத நிலையிலும், இந்த ஆண்டு நிலைமை எப்படி இருக்கும் என அனைவரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன், தீபாவளி நாளுக்கான வானிலை நிலவரத்தைப் பற்றி விளக்கமளித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, தீபாவளி அதிகாலை நேரத்தில் கிழக்குத் திசை காற்றின் ஊடுருவல் காணப்படும். இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை இடியுடன் கூடிய சிறிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல், வடக்கு உள்மாவட்டங்கள், மேற்கு, மத்திய மற்றும் தெற்கு உள்மாவட்டங்களில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பொழியக்கூடும். ஆனால், இந்த மழை கனமழையாக இல்லாமல் பரவலான மிதமான மழையாக இருக்கும் என்றும், நண்பகல் நேரத்தில் நல்ல வெயில் காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கிழக்குத் திசை காற்று ஊடுருவுவதால், கடல் காற்று நகரத்திற்குள் நுழையும். இதனால், தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பால் ஏற்படும் காற்றுமாசு அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் ஹேமச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், மாலை நேரத்தில் புறநகர் பகுதிகளில் மழை ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையின் முதல் கட்டம் அக்டோபர் 23 முதல் நவம்பர் 7 வரை தீவிரமடையும் என்றும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறிதளவு அதிகமான 60 சதவீத மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version