இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இந்திய அணிக்கான ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தொடர்ச்சியான மாற்றங்களை சந்தித்து வரும் இந்திய அணி, எதிர்கால திட்டங்களை முன்னிட்டு இளம் வீரர்களை முன்னிலைப்படுத்தி வருகிறது. கேப்டன் மாற்றம் உள்ளிட்ட துணிச்சலான முடிவுகளை பிசிசிஐ எடுத்து வரும் நிலையில், தோனியை மீண்டும் அணியின் வழிகாட்டியாக நியமிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளை இந்தியாவிற்கு வென்றுத் தந்த ஒரே கேப்டனாக தோனி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 2020ல் ஓய்வு பெற்ற அவர், தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இதற்கு முன், 2021ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கான ஆலோசகராக தோனி பணியாற்றியிருந்தார். அப்போது விராட் கோலி கேப்டனாகவும், ரவி சாஸ்திரி பயிற்சியாளராகவும் இருந்தனர். ஆனால், அந்தத் தொடரில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து, லீக் சுற்றிலேயே இந்தியா வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீருடன் தோனி இணைந்து செயல்படலாம் என்பதும் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது. 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக மறக்க முடியாத கூட்டணியை அமைத்த இந்த இருவரும், மீண்டும் இணைவது ரசிகர்களுக்குள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கருத்து தெரிவித்து, “தோனி ஆலோசகராக வந்தால், அவரது அனுபவம் இளம் வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வீரர்களும் அவருக்கு பெரும் மரியாதை அளிக்கிறார்கள். தோனி – கம்பீர் கூட்டணி கவனிக்கத்தக்கதாக இருக்கும்,” என்றார்.
ஆனால், தோனியின் நியமனம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை பிசிசிஐ அல்லது தோனி தரப்பில் எதுவும் வெளியாகவில்லை.