அமைச்சர் துரைமுருகன் மீது பதிவு செய்யப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை வேலூரிலிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதற்கான காரணத்தை விளக்குமாறு, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006 முதல் 2011 வரை திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், வருமானத்தை விட அதிகமாக ரூ.1 கோடி 40 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் சேர்த்ததாக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது.
அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், இருவரையும் 2017 ஜனவரி மாதத்தில் வேலூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
அந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வேலூர் நீதிமன்றத்தின் விடுவிப்பு உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரித்து ஆறு மாதங்களில் முடிக்க உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து வழக்கை சென்னை ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
பின்னர் 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் வழக்கை மீண்டும் வேலூருக்கு மாற்றக் கோரி துரைமுருகன் மற்றும் அவரது மனைவி மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து துரைமுருகன் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில், துரைமுருகன் தரப்பு, சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் தற்போது விசாரணைக்கு தடை விதித்துள்ளதாக தெரிவித்தது.
மனுவுக்கு பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கால அவகாசம் கோரிய நிலையில், நீதிபதி சதீஷ்குமார் விசாரணையை நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், வழக்கை வேலூரிலிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதற்கான விரிவான விளக்கத்தை காவல்துறை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.














