தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு அரசால் திட்டமிடப்பட்டுள்ள வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR – Summary Revision) விவகாரத்தில் தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும் சரமாரியான கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “எஸ்.ஐ.ஆர். என்றால் ஸ்டாலின் பதறுவது ஏன்? போலி வாக்காளர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்காகத்தான் எஸ்.ஐ.ஆர். கொண்டுவரப்படுகிறது. இது முறைகேடாக இருக்கும் வாக்காளர்களை விடுவித்து, தகுதியானவர்கள் இடம்பெற வேண்டும் என்பதற்கான நடவடிக்கை. இதனை ஏன் தி.மு.க. எதிர்க்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
“எஸ்.ஐ.ஆர் என்றாலே தி.மு.க. அலறுகிறது, பதறுகிறது. ஒரு மாதம் காலம் இருக்கிறது. 300 வீடுகள் இருக்கும் ஒரு பாகத்தில் வாக்காளர் படிவம் கொடுக்க 8 நாட்கள் போதும். போலி வாக்காளர்களை நீக்க எஸ்.ஐ.ஆர். அவசியம். தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எஸ்.ஐ.ஆர்.-ஐ எதிர்க்கும் நோக்கம் திருட்டு வாக்குகளுக்காகத்தான். வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியை மக்களுக்குக் கூறவே ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்,” என்று கடுமையாக விமர்சித்தார்.அ.தி.மு.க.வின் நிலைப்பாடு: “எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அண்ணா தி.மு.க. வழக்குத் தொடர்ந்தது உண்மைதான். தி.மு.க. தவறான தகவல்களைத் தெரிவிப்பதாலேயே, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்யக் கோரி நாங்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம்,” என்றும் அவர் விளக்கம் அளித்தார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்துப் பேசிய அவர், தி.மு.க. ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார். கோவை பாலியல் வன்கொடுமை: “கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது கொடுமையான செயல். மக்கள் நடமாடும் இடங்களில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.”காவலர் அத்துமீறல்: “திண்டிவனத்தில் ஒரு மாணவியைக் காவலரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய காவலரே இப்படிச் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.”
“பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்த திராணியற்ற அரசாக தி.மு.க. உள்ளது தெளிவாகிறது,” என்று அவர் சாடினார். மேலும், “போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன. அரசு மற்றும் காவல் துறை மீது பயம் இல்லாமல் தொடர் சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கிறது. தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.” என்றும் அவர் தெரிவித்தார். போக்சோ வழக்கில் ரூ.104 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுவது வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் இவ்வளவு குற்றங்கள் நிகழ்ந்தும், நிரந்தர டி.ஜி.பி.யை நியமனம் செய்யாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். “தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரை டி.ஜி.பி.யாக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. அரசு காலதாமதம் செய்கிறது. டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் உரிய வழிமுறைகளை தி.மு.க. அரசு பின்பற்றவில்லை. நிரந்தர டி.ஜி.பி.யை நியமிக்க வலியுறுத்தியும் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. டி.ஜி.பி. நியமனத்தில் ஏன் இத்தனை குளறுபடி? ஏன் அரசு இத்தனை பாரபட்சம் காட்டுகிறது?” என்றும் அவர் விமர்சித்தார். குடும்ப அரசியல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “என் மகனையோ, மருமகனையோ கட்சியில், ஆட்சியில் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? என் மீது வேறு குற்றச்சாட்டு வைக்க முடியாததால் குடும்ப அரசியல் எனக் கூறுகிறார்,” என்று விளக்கமளித்தார்.அ.தி.மு.க. கூட்டணியைக் குறித்து, “அண்ணா தி.மு.க. ஆட்சியை தி.மு.க.வால் குறை சொல்ல முடியாததால், பா.ஜ.க.வுடனான கூட்டணியை விமர்சிக்கின்றனர். எங்கள் கூட்டணிக்கு அண்ணா தி.மு.க. தான் தலைமை என உள்துறை மந்திரியே அறிவித்துவிட்டார். முதலமைச்சர் வேட்பாளரும் அண்ணா தி.மு.க.வை சேர்ந்தவர் தான் என்பதை அமித்ஷா உறுதி செய்துவிட்டார்,” என்று கூறி இறுதிக் கருத்தைக் கூட்டணி பலத்துடன் முடித்தார்.

















