மகனுக்கு பொறுப்பு ஏன் ? நயினார் நாகேந்திரன் விளக்கம்

சென்னை: தமிழக பா.ஜ.,வில் பல்வேறு பிரிவுகளுக்கான மாநில அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக, தமிழக பா.ஜ.க, தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “அ.தி.மு.க.வில் உள்ளக பிரச்சனைகளை அவர்கள் தாங்களே தீர்க்க வேண்டும் என்று கூட்டணி முடிவு செய்த நாளே உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக தெரிவித்துவிட்டார். என் மகன் நயினார் பாலாஜி, ஏற்கனவே பா.ஜ.க, இளைஞரணியில் மாநில துணைத் தலைவராக இருந்தார். அதன் அடிப்படையில் அவருக்கு கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் அவர், “பா.ஜ.க,வில் முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஏழு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் பல மாற்றங்கள் நிகழும். அதன் பின்னணியில் தான் ஆட்சிமாற்றம் குறித்து கணிக்க முடியும். தமிழக பா.ஜ.க,வில் கோஷ்டி என்பதே இல்லை” எனக் கூறினார்.

அதேவேளை, சமூக நீதி குறித்து பா.ஜ.க, பேசுவதற்கு முழு உரிமை உண்டு எனவும் அவர் வலியுறுத்தினார். “திரவுபதி முர்மு, அப்துல் கலாம் போன்றோரை குடியரசுத் தலைவர்களாக நியமித்தது பா.ஜ., தான். அ.தி.மு.க.–பா.ஜ.க, கூட்டணி மூழ்கும் கப்பல் அல்ல; 2026 தேர்தலில் பறக்கவிருக்கும் ஜெட் விமானம்” என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Exit mobile version