ஏன் சாதி ரீதியான பாட்டு போடுறீங்க ? – கேள்வி கேட்ட திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு !

ராமநாதபுரம் மாவட்டம், வழுதூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 5ம் தேதி முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் வரவு–செலவு தொடர்பாகவும், இன்னிசை நிகழ்ச்சியில் சாதி ரீதியான பாடல் பாடுமாறு கூறியதற்கும் திமுக நிர்வாகி சார்பில் எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து, திமுக ஐடி விங் ராமநாதபுரம் ஒன்றிய அமைப்பாளர் கௌதம் மற்றும் குற்றச் சரித்திரம் கொண்ட பிரபு ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக, நேற்று நள்ளிரவு பிரபு, அலெக்ஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கௌதம் வீட்டிற்கு வந்து, அங்கு இருந்தவர்களை மிரட்டி, கற்களை எறிந்து கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

பின்னர், அதே இரவில் மீண்டும் வந்து, கௌதம் வீட்டில் மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பினர். இதனால், வீட்டில் இருந்த சோபா, ஜன்னல், கதவு ஆகியவை எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version