தவெக மாநாட்டில் பவுன்சரால் தூக்கி வீசப்பட்டவர் யார் ? – புதிய சர்ச்சை

மதுரை மாவட்டம் பரப்பத்தியில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் நடிகர் விஜய் பங்கேற்றபோது, மேடையில் ஏற்பட்ட ஒரு சம்பவம் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாநாட்டின் போது, அத்துமீறி மேடையில் ஏறிய இளைஞரை, விஜய்யின் பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) தூக்கி வீசிய காட்சி பரவலாக பேசப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்த விவகாரத்தில் பல்வேறு தரப்புகள் மாறி மாறி கருத்து தெரிவித்து வருவதால், “உண்மையில் தூக்கி வீசப்பட்டவர் யார்?” என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதலில், பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையத்தைச் சேர்ந்த சரத்குமார் தான் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டதாக, அவரது தாயார் சந்தோஷம் குற்றஞ்சாட்டினார். ஆனால், பின்னர் சரத்குமார் வீடியோ வெளியிட்டு, “நான் அல்ல, யாருக்கும் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக வீடியோ போட்டேன்” என்று விளக்கம் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், விஜய் மற்றும் அவரது பாதுகாவலர்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் உள்ளார்.

இதற்கு பதிலளித்த தவெக பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் சிவக்குமார், “சரத்குமார் மாநாட்டிற்கு வரவே இல்லை. அவர் பொய்யான புகார் அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞர், “வீடியோவில் தூக்கி வீசப்பட்டவர் நான்தான்” என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதன் மூலம், பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டவர் யார் என்பதில் புதிய குழப்பமும் சர்ச்சையும் எழுந்துள்ளது.

Exit mobile version