சென்னை, மே 26: இணையத்தில் நடந்துகொண்டிருக்கும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், வாட்ஸ்அப்பை மையமாகக் கொண்டு பரவி வரும் புதிய வகை மோசடி சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் படங்கள் மற்றும் மீம்ஸ் மூலமாக ஹேக்கர்கள் பயனர்களின் மொபைல்களில் மால்வேர், ஸ்பைவேர் போன்ற அபாயகர மென்பொருட்களை நுழைத்துத் தங்கள் ரகசிய தகவல்களை திருடி வருகின்றனர்.
இதன் காரணமாக, வங்கிக் கணக்கு விபரங்கள், சமூக ஊடக கணக்குகள், மற்றும் தனிப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் மோசடிக்குள்ளாகும் அபாயம் உள்ளது. குறிப்பாக, பயனர்கள் தவறுதலாக ஒரு வெறுமனே வேடிக்கையான மீமை கிளிக் செய்தாலுமே, ஹேக்கர்கள் தங்களின் மென்பொருளை தொலைபேசியில் நிறுவி, அதன் மூலம் OTP, கடவுச்சொல், கிரெடிட் கார்டு விவரங்கள் என அனைத்து விவரங்களையும் திருடி வருகின்றனர்.
மட்டுமல்லாது, இந்த மென்பொருள் பயனரின் தொலைபேசி கேமரா மற்றும் மைக்ரோஃபோனையும் ஹேக் செய்து, உளவு பார்க்கும் கருவியாகவும் செயல்படுகிறது. இது ஒரு நபரின் தனியுரிமைக்கும் பெரும் ஆபத்தாகக் கருதப்படுகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து இணையவழி குற்றங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும், சைபர் குற்றவாளிகள் புதுப்புது உத்திகளை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். இதில் குறிப்பாக வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் “மீம்கள்” மூலமாக மோசடி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்:
- தெரியாத எண்களிலிருந்து வரும் படங்கள் அல்லது மீம்களை பதிவிறக்கம் செய்யவேண்டாம்.
- சந்தேகம் ஏற்படும் தகவல்களை பிறருக்கு ஷேர் செய்யாதீர்கள்.
- உங்கள் தொலைபேசியில் நம்பகமான பாதுகாப்பு செயலியை நிறுவி, அதனைத் தாங்கள் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.
இந்த வகையான மோசடிகளில் சிக்கிக்கொள்ளும் பொதுமக்கள், தங்களது பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும். எனவே, “ஒரே ஒரு கிளிக்கே போதுமானது” என்ற எண்ணத்துடன் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவது இன்றியமையாததே என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.