செங்கோட்டையனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ? – சந்தித்து பேசிய முன்னாள் எம்.பி.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளார் என்கிற ஊகங்கள் தொடர்ந்து கிளம்பி வரும் நிலையில், செங்கோட்டையன் சமீப காலங்களில் பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளையும், பரப்புரைக் கூட்டங்களையும் தவிர்த்தது சந்தேகத்தை வலுப்படுத்தியது. மேலும், கட்சியில் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகவும், அதனால் அவர் மாற்றுப் பாதையை யோசிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், சசிகலாவுடன் செங்கோட்டையன் பேசியதாகவும், இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து விளக்கம் அளித்த செங்கோட்டையன், “அப்படி யாரையும் நான் சந்திக்கவில்லை. எனது கருத்துகளை வரும் 5ஆம் தேதி வெளிப்படையாகத் தெரிவிக்கிறேன்” என்று உறுதியாகக் கூறினார். மேலும், ஈரோட்டில் நடைபெறவுள்ள கூட்டங்களுக்கு யாருக்கும் தனிப்பட்ட அழைப்பு விடுக்கவில்லை என்றும், “எனக்கான பாசத்தால் யாரும் கலந்து கொள்ளலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரோட்டில் முன்னாள் எம்.பி. சத்யபாமா செங்கோட்டையனை சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக தெரிவித்தார்.

வரும் 5ஆம் தேதி செங்கோட்டையன் எதை அறிவிக்கிறார்? – மாற்றுப்பாதையை தேர்வு செய்யப் போகிறாரா, அல்லது பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கப் போகிறாரா என்ற கேள்விகள் அதிமுக வட்டாரங்களில் எழுந்துள்ளன. இதற்கிடையில், அந்த தேதிக்குள் பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே சமாதானம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version