தளபதி விஜய்யின் கரூர் பொதுக்கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து கடும் விமர்சனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், திமுகவில் இணைந்த மருது அழகுராஜ் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அந்த கூட்ட நெரிசலில் சிக்கியவர் உங்கள் மகனோ, மகளோ ஒருவராக இருந்திருந்தால், நீங்கள் களத்தில் இறங்கி காப்பாற்றியிருப்பீர்களா, அல்லது களத்திலிருந்து கம்பி நீட்டியிருப்பீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதனுடன், “நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு உங்களைச் சந்திப்பதாக உறுதி அளித்த ஒருவர், அதே நேரத்தில் சென்னையிலிருந்து தான் புறப்பட்டார் என்று தெரிந்தால் மகிழ்வீர்களா அல்லது மனம் கொதிப்பீர்களா? ஒருவரை சந்திக்க 10 மணி நேரம் காத்திருக்கும் மக்களுக்கு ஒரு பாட்டில் தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?” எனவும் விமர்சித்துள்ளார்.
மேலும் அவர், “நெரிசல் மிக்க கூட்டத்துக்குள் மக்கள் காத்திருக்க, நீங்கள் வாகனத்தின் உள்ளே லைட்டை ஆன், ஆஃப் செய்து சிரித்தபடி அமர்ந்திருந்தால், அதை மக்கள் எப்படிப் பார்க்க வேண்டும்? உங்களுக்கு ஒரு துக்கம் ஏற்பட்டால், ஆறுதல் சொல்ல ‘நட்சத்திர ஹோட்டலுக்கு வாருங்கள்’ என்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?” எனக் கேட்டுள்ளார்.
அதோடு, “உங்கள் சுற்றுப் பயணங்களில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி அல்லது மரக் கிளையில் தொங்கும் இளைஞர்களில் உங்கள் பிள்ளைகளும் ஒருவராக இருந்தால், அதை நீங்கள் பெருமைப்படுவீர்களா அல்லது கண்டிப்பீர்களா? ஆர்வத்துடன் ‘ரேம்ப் வாக்’ மேடையில் ஓடி வந்து உங்களுடன் கைகுலுக்க முயன்ற இளைஞனை பவுன்சர்கள் தூக்கி வீசிய சம்பவத்தையும் நினைவில் கொள்ளுங்கள்,” என மருது அழகுராஜ் குறிப்பிட்டுள்ளார்.
“சமூகத்தை வெறிபடுத்துவது அல்ல தலைமைத்துவம்; நெறிப்படுத்துவதே உண்மையான தலைமைத்துவம். அது சாத்தியமானால் அதைச் செய்ய முயலுங்கள்,” என்று தனது பதிவை முடித்துள்ளார்.
