சேலம்: தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல திரைப்படங்கள் வெளியான நிலையில், அவற்றை விட டாஸ்மாக் மது விற்பனை வசூல் சாதனை படைத்துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “உரிமை மீட்க, தலைமுறை காக்க” என்ற தலைப்பில் 100 நாள் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த பயணத்தின் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் மேட்டூரில் பொதுமக்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம், வேலைவாய்ப்பு பிரச்சனை, சாதி வேறுபாடு ஆகியவற்றை தீவிரமாக விமர்சித்தார்.
அவர் தெரிவித்ததாவது :
“முதலமைச்சர் ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்கிறார். உண்மையிலேயே அதை விரும்பினால், தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கிடைக்காத மக்களை அடையாளம் கண்டு அவர்களை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சினிமாவில் ஜாதி இல்லை என்று சொன்னால் ஜாதி ஒழிந்து விடாது; கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை சமமாக வழங்குவதுதான் உண்மையான சமூக நீதி,” என்றார்.
மேலும், “வேலைவாய்ப்பு இல்லாமை தான் தென் மாவட்டங்களில் சாதி சண்டைகளுக்கு காரணம். சென்னை போன்ற நகரங்களில் வேலை வாய்ப்பு இருப்பதால் அங்கு சாதி மோதல்கள் குறைவாக உள்ளன. ஆனால் தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இல்லாததால் இளைஞர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள்,” எனவும் குறிப்பிட்டார்.
“தமிழ்நாட்டில் ஒரு கோடியே 30 லட்சம் இளைஞர்கள் படித்தும் வேலையில்லாமல் உள்ளனர். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தான் அதிக அளவில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இது மிகவும் வெட்கக்கேடான நிலைமை. 2021-இல் மாணவர்களில் 9 சதவீதம் பேர் போதைப் பழக்கத்தில் இருந்தனர். தற்போது அது 15 சதவீதமாக உயர்ந்துள்ளது, அதாவது சுமார் 25 லட்சம் மாணவர்கள் போதைப் பழக்கத்தில் சிக்கியுள்ளனர்,” என்றார்.
















