சென்னை:
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் முதல் கட்ட அரசியல் சுற்றுப்பயண விவரம் வெளியானுள்ளது. இதனால் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
தொடக்கத்தில் திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரடியாக டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில்தான் விஜய்யின் முழுமையான சுற்றுப்பயண அட்டவணை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பயணம்
விஜய் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் தொடங்குகிறார். டிசம்பர் 20-ஆம் தேதி மதுரையில் நிறைவடையும் இந்த பயணம் முழுக்க முழுக்க வார இறுதிகளில் மட்டுமே நடைபெற உள்ளது.
பெரும்பாலான மாவட்டங்கள் தனித்தனி தேதிகளில் களமிறங்க உள்ள நிலையில், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை (செப்.20), கோவை, நீலகிரி, ஈரோடு (அக்.4,5), குமரி, நெல்லை, தூத்துக்குடி (அக்.11), தென் சென்னை, செங்கல்பட்டு (அக்.25), கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் (நவ.1), திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் (நவ.8), தென்காசி, விருதுநகர் (நவ.15), கடலூர் (நவ.22), சிவகங்கை, ராமநாதபுரம் (நவ.29), தஞ்சை, புதுக்கோட்டை (டிச.6), சேலம், நாமக்கல், கரூர் (டிச.13), திண்டுக்கல், தேனி, மதுரை (டிச.20) ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
எதிர்க்கட்சிகளின் தாக்குதல்
அரசியலுக்கு வந்த பிறகு, மக்களிடம் நேரடியாக செல்வதை தவிர்த்து அலுவலகத்திலிருந்தே அறிக்கைகள் வெளியிட்ட விஜய் மீது எதிர்க்கட்சிகள் நீண்டநாள் “WFH பாலிடிக்ஸ்” குற்றச்சாட்டை முன்வைத்து வந்தன. வெள்ளப்பாதிப்பு மற்றும் தூய்மை பணியாளர்கள் போராட்டக் குழுவினரை பனையூர் அலுவலகத்தில் மட்டுமே சந்தித்ததும் விவாதத்துக்கு வழிவகுத்தது.
இந்நிலையில், வார இறுதிகளில் மட்டுமே சுற்றுப்பயணம் நடத்தும் இந்த அட்டவணையை திமுக உள்ளிட்ட கட்சிகள் “வீக் எண்ட் பாலிடிக்ஸ்” என்று தாக்கி வருகின்றன.















