பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரில் ரூ.3 கோடி மதிப்பில் திருமண மண்டபம் கட்டப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்று பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்ட பலர் பங்கேற்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முதலில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மருது பாண்டியர்களின் 224-வது குருபூஜையை ஒட்டி, மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள அவர்களின் சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது,
“நாட்டின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த முத்துராமலிங்கத் தேவர், அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் இளவல் போல் வாழ்ந்தவர். அவரை ‘அறத்தின் வடிவம்’ என அண்ணா போற்றியுள்ளார். 1969-ம் ஆண்டு தேவர் நினைவிடத்தை மணி மண்டபமாக உருவாக்கியது கலைஞரின் ஆட்சி. பின்னர் 2007-ல் தேவரின் நூற்றாண்டு விழாவையும் அரசு விழாவாக மாற்றியது அதே ஆட்சி,” என்று முதலமைச்சர் ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.
மேலும், “ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் மகனார் பெயரில் ரூ.3 கோடி செலவில் திருமண மண்டபம் கட்டப்படும்,” என்று அறிவித்தார்.
















