மாமல்லபுரம் :
பாமக தலைவர் அன்புமணி தலைமையில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மெகா கூட்டணி அமைப்போம் என்றும், நாமும் ஆட்சியில் பங்குபெறுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே நீண்டநாள் மோதல் நிலவி வரும் நிலையில், இருவரும் தனித்தனியாக பொதுக்குழுக் கூட்டங்களை அறிவித்தனர். ராமதாஸ் தரப்பின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், அன்புமணியின் பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி,
“டாக்டர் ராமதாஸின் கனவுகளான சமூக நீதி, சாதி வாரியான கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றை இணைந்து நிறைவேற்றுவோம். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் முதல் இலக்கு. யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது குறித்து விரைவில் முடிவு எடுப்போம். நல்ல கூட்டணி அமைத்து, மெகா கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம். நாமும் ஆட்சியில் பங்குபெறுவோம்,” என்று தெரிவித்தார்.
மேலும், “ஓராண்டு காலம் தலைவராக தொடர அனுமதி வழங்கிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நன்றி. நான் பதவிக்கு ஆசைப்படுபவன் அல்ல; சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதே என் நோக்கம்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
கூட்டத்தில், “அய்யா ராமதாஸுக்காக ஒரு நாற்காலி நிரந்தரமாக இருக்கும்; அவர் நமது கட்சியின் நிறுவனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” என்றும் அன்புமணி குறிப்பிட்டார்.