இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது போட்டி, லார்ட்ஸில் தீவிர மோதல்களுடன் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி வீரர்களும், தோல்வியை சந்தித்த இந்திய வீரர்களும் இடையே நடத்திய வார்த்தைப் போரால் போட்டி பரபரப்பாக மாறியது.
போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டம் நெருக்கடியான முடிவுக்கு நகர்ந்தது. மூன்றாவது நாள் ஆட்டம் முடிவடைய 6 நிமிடங்கள் இருந்தபோது, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. இந்திய அணிக்கு ஒரு விக்கெட் எடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் பந்து வீசிய நிலையில், இங்கிலாந்து ஓப்பனர் ஜாக் கிராவ்லி சைடு ஸ்கிரீன் பிரச்னை, கையில் அடிபட்டது போன்ற காரணங்களால் நேரத்தை தாமதிக்க முயன்றார். இதனால் கேப்டன் சுப்மன் கில்லுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் பும்ரா, சிராஜ் உள்ளிட்டோர் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக கைத்தட்டி கண்டனம் தெரிவித்தனர். இங்கிலாந்து வீரர்களும் அதற்கான பதிலடி அளித்தனர். நிதிஷ் குமார் ரெட்டிக்கு எதிராக ஹாரி ப்ரூக், “நீ யாரு, சன்ரைசர்ஸ்லயும் உன்னை பற்றி கேள்விப்பட்டதே இல்ல!” எனக் கூறி, அவரது கவனத்தை சிதறடித்தார்.
இந்த வகையில், ஜடேஜாவுக்கு எதிராக பவுலர் ஜொஷ் டாங்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மொத்தமாக லார்ட்ஸ் டெஸ்ட், வெறும் கிரிக்கெட் மட்டுமல்லாமல், வார்த்தைப் போரையும் காண்பித்த ஒரு நெருக்கடியான மோதலாக மாறியது.
இந்த வெற்றிக்குப் பிறகு, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் செய்தியாளர்களிடம்,
“ஒரு அணியின் தொடக்க வீரர்கள் இரண்டு பேர் களமிறங்கும்போது, எதிரணியின் 11 பேர் முழுமையாக அவர்களுக்கு எதிராக வருகிறார்கள் என்றால், அது வேறொரு முகத்தைக் காட்டுகிறது”
எனக் கூறி, இந்திய அணியை நேரடியாகக் குறிப்பிடாமல் எச்சரிக்கை விடுத்தார்.
அதேபோல் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறும்போது,
“நாங்கள் வெளியே சென்றபோது சிலர் நன்றாக நடந்துகொள்ளவில்லை. அதற்கான பதிலடியாக நாங்கள் ஒன்றாக சேர்ந்து பதில் அளித்தோம்”
என்றார்.
இந்த வகை சீண்டல்களுக்கு இந்திய ரசிகர்கள் கடும் எதிர்வினை தெரிவித்துள்ளனர். ஒருவர்,
“விராட் கோலி இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது… அடுத்த போட்டியில் இவர்களுக்கு கருணையே காட்டக்கூடாது”
என சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளார்.















