தவெக விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை: திருமாவளவன் விளக்கம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மீது எங்களுக்கேதும் வன்மம் இல்லை என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தவில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் நினைவாக அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜய் மீது எங்களுக்குத் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை. அவரை கைது செய்ய வேண்டும் என கூறவில்லை. நடந்த துயரச்சம்பவத்துக்கு விஜய் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்றுதான் நாங்கள் கூறினோம்,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது :

“கரூர் சம்பவத்தில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளன. ஆனால், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்தான் இதை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்கின்றன. விஜயை தங்களது வலையில் சிக்க வைக்க பாஜக பகீரத முயற்சிகள் மேற்கொள்கிறது. சதிகார அரசியல் சக்திகளிடம் சிக்கினால், விஜய் எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். அவர் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.”

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நடந்த காலணி வீச்சு முயற்சியையும் அவர் கடுமையாக கண்டித்தார்.

“அந்த சம்பவம் சனாதன சக்திகளின் ஆக்கிரமிப்பு உச்சநீதிமன்றத்திற்குள் கூட நுழைந்துவிட்டதை காட்டுகிறது. ராகேஷ் கிஷோரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்,” எனத் திருமாவளவன் வலியுறுத்தினார்.

மேலும், கரூர் நெரிசல் சம்பவம் குறித்து நேற்று அவர் கூறுகையில், “விஜயோ அல்லது மற்றவர்களோ இதை திட்டமிட்டு செய்ததாக எங்களால் நினைக்க முடியாது. இதில் யாருக்கும் கிரிமினல் நோக்கம் இல்லை. மக்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். இது ஒரு துயரமான நெரிசல் சம்பவம் — அதற்காக விஜய் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்து,” என விளக்கம் அளித்தார்.

அரசின் மீது குற்றச்சாட்டு சுமத்த முடியாது என்றும், தன்னை காண வந்த மக்களின் பெருந்திரளால் ஏற்பட்ட நெரிசலே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

கரூரில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு விசிக சார்பில் தலா ரூ.50,000 நிதி வழங்கப்பட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

Exit mobile version