“சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” – திமுக எம்.பி. கனிமொழி

கரூர் :
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஆறுதல் கூறியும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்தும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “இதில் சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மக்களின் பாதுகாப்பே முதன்மை” என்று தெரிவித்துள்ளார்.

கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் நலனை விசாரித்த கனிமொழி, மருத்துவர்களிடம் சிகிச்சை நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்தக் கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இருக்கும். அவை யாரையும் அச்சுறுத்துவதற்கோ, இடையூறு செய்யவதற்கோ அல்ல; மக்களும், தலைவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக. தவெக நிகழ்ச்சிக்கும் காவல்துறையினர் முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கியிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் இத்தகைய துயரச் சம்பவம் நடந்துவிட்டது,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:
“கரூர் சம்பவம் அழியாத வடு போல மாறிவிட்டது. இவ்வாறு நடக்கக் கூடாது. எங்களுடைய குடும்பத்திலும் இரண்டு முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். நாங்களும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்; ஆனால் எப்போதும் மக்களின் பாதுகாப்பை முதன்மை எனக் கருதினோம். பிரதமர், முதலமைச்சர் கலந்து கொள்கின்ற கட்சி நிகழ்ச்சிகளுக்குக் கூட கட்டுப்பாடுகள் இருக்கும். அதுபோலவே இங்கும் மக்களின் பாதுகாப்பே முக்கியம்.

நாங்கள் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. அப்படி எண்ணியிருந்தால் முதலமைச்சர் நள்ளிரவு 1 மணிக்கே கரூருக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களைக் காண்பதில்லை. எங்கள் பிரதிநிதிகளும் களத்தில் இறங்கி உதவியிருக்க மாட்டார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி அடிப்படையிலான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வது தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களை பாதுகாப்பது முதலமைச்சரின் கடமை.”

பின்னர், கூட்ட நெரிசலில் உயிரிழந்த கிஷோர், ரமேஷ் உள்ளிட்டோரின் இல்லங்களுக்கு சென்று கனிமொழி ஆறுதல் கூறினார். அத்துடன், தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ₹10 லட்சம் நிவாரண காசோலைகளையும் அவர் குடும்பத்தினரிடம் கையளித்தார்.

Exit mobile version