“விஜய்க்காக சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் நிற்கிறோம்… வாக்களிக்க வரிசையில் நின்று விட மாட்டோமா ?” – தவெக தொண்டர்கள் உற்சாகம்

நாமக்கல் :
தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் சுற்றுப்பயணத்துக்காக நாமக்கல் மாவட்டத்தில் தொண்டர்கள் பெருமளவில் திரண்டு வருகிறார்கள். அதிகாலை முதலே பெண்கள், இளைஞர்கள் என பலரும் கூடுவதால், அங்கு உற்சாக சூழல் நிலவுகிறது.

விஜய் ஏற்கனவே திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், மூன்றாவது கட்டமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு விஜயம் செய்கிறார். சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சிக்கு வந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கலுக்குச் சென்றார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு தவெக பெண் தொண்டர் கூறியதாவது :
“நாங்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் ஒருநாள் முழுக்க விஜய்யை பார்க்க இங்கே காத்திருக்கிறோம். அப்படியிருக்க, தேர்தலின் போது ஒரு மணி நேரம் வரிசையில் நின்று ஓட்டு போட மாட்டோம் என்கிறார்கள். இது தவறான கணக்கு. 2026 தேர்தல் முடிவில் யார் உண்மையில் மக்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதுதான் தெரிய வரும். எங்களுடைய வாக்குகள் தவெக தலைவருக்கே செல்லும். விஜய் எப்போதும் சிம்மாசனமிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்வார்,” என அவர் உறுதியளித்தார்.

விஜய்யின் பேச்சை நேரில் கேட்பதற்காகவே நேற்றிரவே நாமக்கலில் வந்ததாகவும், கூட்டம் எவ்வளவு இருந்தாலும் அது வாக்காக மாறும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.

விஜயின் நாமக்கல் சுற்றுப்பயணம் காரணமாக அந்த பகுதியில் காவல்துறை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Exit mobile version