மதுரை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சித் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
வரும் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கட்சி முழு வீச்சில் தயாராகி வருவதாக அவர் கூறினார். அரசியல் பயணத்தில் எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும், மக்கள் ஆதரவும் கடவுளின் அருளும் துணையாக உள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.
மாநாடு குறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர், “முத்தமிழை வளர்த்த மதுரையில் நடைபெறும் இந்த மாநாடு, கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளை சமரசமின்றி எதிர்த்து, ஜனநாயகப் போரில் வெற்றி பெற்று, தமிழக மக்களுக்கான நல்லாட்சியை நிறுவும் நம்முடைய குறிக்கோளை உறுதி செய்யும் நிகழ்வாக இருக்கும்.
‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழகம்’ என்ற தேர்தல் அரசியல் மையக் கருத்தை முன்வைத்து மாநாடு நடைபெறும். மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று; முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்,” என தெரிவித்துள்ளார்.