“நாங்களும் அரசியல் கட்சி தான் !” : எஸ்.ஐ.ஆர் கூட்டத்தில் தவெக வாக்குவாதம் !

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகளைப் பற்றிய ஆலோசனைக் கூட்டம் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வாக்காளர் பதிவு அலுவலர் கீதா ராணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இருமுறை பதிவு, வெளியூர் குடியேறியவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் ஆகியோரின் விவரங்கள் தொடர்பான செயல்முறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த நேரத்தில், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கூட்டத்துக்குள் வந்து, “எங்களை ஏன் அழைக்கவில்லை? நாங்களும் அரசியல் கட்சியினர்தான்” என வாக்காளர் பதிவு அலுவலர் கீதா ராணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கே இத்தகைய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுவதாகவும், அங்கீகாரம் இல்லாததால் தவெக பிரதிநிதிகள் பங்கேற்க முடியாது என்றும் தெரிவித்தனர். ஆனால், தவெக தொண்டர்கள் தொடர்ந்து வாதாட்டம் மேற்கொண்டதால் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறு பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், நாடு முழுவதும் 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை வீடு தேடி வாக்காளர் விவர சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. முன்னதாக நவம்பர் 18 அன்று வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் 94.74% வீடுகளுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Exit mobile version