கரூர் : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர். நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர்மீது மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு மீறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக இருந்த கரூர் டிஎஸ்பி செல்வராஜிடம் இருந்து பொறுப்பை மாற்றி, கூடுதல் எஸ்.பி பிரேமானந்தனை நியமித்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், “கைது செய்வதைத் தவிர்க்க முன்ஜாமீன் வழங்க வேண்டும். நாங்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினோம், எந்த தவறும் எங்களால் நடைபெறவில்லை. காவல்துறையே உரிய பாதுகாப்புகளை மேற்கொள்ளவில்லை. வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடப்போம். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயார். எனவே எங்களை கைது செய்வதைத் தவிர்த்து முன்ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.