தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இன்று எழுச்சியுடன் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில், சமூக நல்லிணக்கம் மற்றும் சிறந்த நிர்வாகத்திற்காக வழங்கப்படும் ‘சிறந்த மஹல்லா’ விருதினை தேனி மாவட்டம் கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி தட்டிச் சென்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் முன்மாதிரியாகத் திகழும் பள்ளிவாசல் ஜமாஅத்களைப் பாராட்டி கௌரவித்தார். அப்போது, தேனி மாவட்டத்தின் புகழ்பெற்ற மற்றும் பழமைவாய்ந்த கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டியின் சீரிய பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, அவர்களுக்குச் சிறந்த மஹல்லா விருதினை முதலமைச்சர் வழங்கிப் பாராட்டினார்.
இந்த உயரிய விருதினை முதலமைச்சருடன் இணைந்து ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்பி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டியினர் பெற்றுக் கொண்டனர். ஜமாஅத் கமிட்டி செயலாளர் நாகூர் மீரான், துணை செயலாளர் அப்துல் காதர், உறுப்பினர்கள் ஜியாவுதீன், ஆசிக் ரகுமான், அம்ஜத் கான் மற்றும் ஜியாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த கௌரவத்தைப் பெற்றுக்கொண்டனர். கல்வி, மருத்துவம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களில் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் காட்டி வரும் அக்கறையும், மத நல்லிணக்கத்தைப் பேணுவதில் அந்த அமைப்பு எடுத்து வரும் முன்னெடுப்புகளுமே இந்த விருதுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
முதலமைச்சர் கையால் இந்த விருதினைப் பெற்ற ஜமாஅத் நிர்வாகிகளுக்குத் தேனி மாவட்ட மக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக ஒற்றுமைக்கு ஜமாஅத்கள் ஆற்றி வரும் பங்கு மகத்தானது என்று குறிப்பிட்டதோடு, கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத்தின் செயல்பாடுகள் பிற மஹல்லாக்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த விருது வழங்கும் நிகழ்வு மாநாட்டில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
