திருவள்ளூர் நகரத்தில் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர ரீதியாக வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளம்பர ரீதியான டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பதாகைகள் வைப்பதற்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும். இதனால் திருவள்ளூர் நகர பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்கள், பண்டிகைகள், திருமண விழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர ரீதியாக வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள் உரிய அனுமதி பெற்ற பின்னரே வைக்க வேண்டும் என்றும் இந்த விளம்பர பேனர்கள் வைப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் 15 நாட்களுக்கு முன்பு உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்றும் பேனர் வைக்கும் இடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் மற்றும் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் தடையில்லா சான்று வாங்க வேண்டும் என்றும், அப்படி அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர்கள் வைத்தால் காவல் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்து 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் தாமோதரன், மற்றும் காவல் துறையினர், கடை மற்றும் திருமண மண்டபத்தின் உரிமையாளர்கள், என பலர் கலந்து கொண்டனர்.















