தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை (SIR) முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற மனிதச் சங்கிலி நிகழ்வு நடைபெற்றது. கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் வருவாய்த் துறை சார்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், பெயர் நீக்குதல், சேர்த்தல், பெயர் திருத்தம், புகைப்படம் மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் குறித்துப் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதில் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த் துறைப் பணியாளர்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலையில் மனிதச் சங்கிலியாக நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கொடைக்கானல் வட்டாட்சியர், கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நேரடி விழிப்புணர்வில் ஈடுபட்டார்.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களில் ஏறி, வட்டாட்சியர் அவர்கள் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்த விவரங்களை எடுத்துரைத்தார். மேலும், வாக்காளர் திருத்தம் குறித்த முக்கியமான வாக்கியங்கள் அடங்கிய நோட்டீஸ்களை சுற்றுலாப் பயணிகளுக்கு விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.வாக்காளர் பட்டியலில் பிழையின்றி, தவறுகள் திருத்தப்பட்டு, உண்மையான வாக்காளர்கள் மட்டுமே இடம் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

















