ஈரோடு செல்லும் வழியில் விஜய் வாகனத்தை மறித்த தொண்டர்கள்

ஈரோடு :
கோவையில் இருந்து சாலை மார்க்கமாக ஈரோடு நோக்கி பயணித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் வாகனம், பெருமாநல்லூர் புறவழிச்சாலையில் தொண்டர்களால் தற்காலிகமாக மறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூரில் ஏற்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, சுமார் 82 நாட்கள் இடைவெளியில் விஜய் ஈரோட்டில் இன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் இணைந்த பின்னர், குறுகிய காலத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெருந்துறை அருகே சரளை பகுதியில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

பொதுக்கூட்டத்தின் போது எந்த அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, கட்சியினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், தொண்டர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இன்று காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற விஜய், அங்கிருந்து சாலை வழியாக ஈரோடு நோக்கி பயணித்தார். கோவையில் ரசிகர்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றையும் மீறி விஜயை காண தொண்டர்கள் திரண்டனர். பலர் விஜயின் வாகனத்தை தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெருமாநல்லூர் புறவழிச்சாலையில் விஜயின் காரை தொண்டர்கள் திடீரென நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, காரின் கண்ணாடியை இறக்கி தொண்டர்களை நோக்கி விஜய் கைகளை அசைத்து வணக்கம் தெரிவித்த பின்னர் பயணத்தை தொடர்ந்தார்.

தலைமை அறிவுறுத்தல்களையும் மீறி தொண்டர்கள் இவ்வாறு நடந்துகொண்டது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Exit mobile version