அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் விஸ்வாஸ் குமார் – புதிய பிரச்சனையில் சிக்கிய அதிர்ச்சி !

கடந்த ஜூலை 12-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து 242 பயணிகளுடன் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து தீப்பிடித்து நொறுங்கியது. இதில், முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் இருந்த ஒரே ஒருவரான விஸ்வாஸ் குமார் ரமேஷ் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவரும் அவரது சகோதரர் அஜயும் டையூவில் உள்ள குடும்பத்தினரை சந்தித்துவிட்டு, லண்டன் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் அஜய் உயிரிழந்தார்.

விபத்திற்குப் பிறகு, தனது சகோதரரின் உடலை தோளில் சுமந்து சென்ற விஸ்வாஸ், அவரது இறுதி சடங்குகளை கண்ணீருடன் முடித்தார். இந்த சம்பவத்தின் தாக்கம் காரணமாக, தற்போது டையூவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

விஸ்வாஸின் உறவினரான சன்னி அளித்த தகவலின் பேரில், விஸ்வாஸ் தற்போது கடும் மனஅழுத்தத்தில் சிக்கியுள்ளார். “வெளிநாட்டிலுள்ள நெருங்கியவர்கள் அவரின் நலனை பற்றி தொடர்ந்து விசாரிக்கிறார்கள். ஆனால் விஸ்வாஸ் யாருடனும் பேசுவதற்கு தயாராக இல்லை. சில நேரங்களில் பேசினாலும், திடீரென அதிர்ச்சி அடைந்து மௌனமாகி விடுகிறார். அவருடைய சகோதரர் இறந்தது மற்றும் விமான விபத்தின் தருணங்கள் தொடர்ந்து மனதில் பதிந்துள்ளன,” என சன்னி கூறியுள்ளார்.

அத்துடன், “நள்ளிரவில் திடீரென பயத்துடன் விழிக்கிறார். மீண்டும் தூங்குவதிலும் சிரமப்படுகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு நாங்கள் அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். தற்போது சிகிச்சை தொடங்கியுள்ளது. அதனால் லண்டனுக்குத் திரும்புவது குறித்து அவர் இதுவரை யோசிக்கவே இல்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபராக இருந்தாலும், விஸ்வாஸ் குமார் ரமேஷ் தற்போது எதிர்கொண்டு வரும் மனநல சிக்கல்கள், அந்த பயங்கர விபத்தின் தாக்கம் எவ்வளவு தீவிரமானது என்பதை உணர்த்துகின்றன.

Exit mobile version