“நீதிமன்ற உத்தரவை மீறுவது மன்னிக்க முடியாதது” – திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடும் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சட்டம்-ஒழுங்கு காரணங்களைக் கூறி முடக்குவது, அரசியலமைப்பு இயந்திரத்தைச் சீர்குலையச் செய்யும் செயல் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் ஏ.டி.ஜி.பி ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம ரவிகுமார் தொடர்ந்த வழக்கில், “டிசம்பர் 3-ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்” என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து அரசுத் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தும், தீபம் ஏற்றும் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது குறித்துத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மனுதாரரை மலையேற விடாமல் தடுத்தது மற்றும் சி.ஐ.எஸ்.எப். வீரர்களைப் போலீசார் தடுத்தது தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த அவமதிப்பு வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், அரசுத் தரப்பு செயல்பாடுகள் குறித்துத் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார். “சட்டம் – ஒழுங்கு நிலைமையைக் காரணம் காட்டி, நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது முற்றிலும் ஏற்புடையதல்ல. இது மன்னிக்க முடியாத செயலாகும். இத்தகைய போக்கு சட்டம் – ஒழுங்கு மேலும் சீர்குலையவே வழிவகுக்கும். இது இறுதியில் அரசியலமைப்பு இயந்திரத்தை முடக்குவதற்கு இட்டுச் செல்லும்” என எச்சரித்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத் தலைமைச் செயலர் முருகானந்தம் மற்றும் சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகினர். மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகினர். அப்போது தலைமைச் செயலர் தரப்பில், “நீதிமன்ற உத்தரவிற்கு அரசு முழு மரியாதை அளிக்கிறது. உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்ற உள்நோக்கம் அரசுக்கு எதுவும் இல்லை. ஆனால், அப்பகுதியில் நிலவிய சட்டம் – ஒழுங்கு பிரச்னை மற்றும் அசாதாரண சூழல் காரணமாகவே மேல்முறையீடு செய்யப்பட்டது. இது குறித்து விரிவான விளக்கங்களை அளிக்க எங்களுக்குக் கூடுதல் அவகாசம் தேவை” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற உத்தரவு தெரிந்தே மீறப்பட்டுள்ளதாக வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் விளக்கங்களைப் பரிசீலிப்பதற்காக வழக்கைத் தள்ளிவைத்தார். நீதிமன்ற உத்தரவைச் சட்டம் – ஒழுங்கு பெயரில் அரசு கிடப்பில் போட்டதாக நீதிபதி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருப்பது, தமிழக அரசியல் மற்றும் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version