விழுப்புரம் நகர 8 வது வார்டில், நகராட்சி நிர்வாகம் செய்து தராத மக்களுக்கான அடிப்படை பணிகளை பெண் கவுன்சிலர் தனது சொந்த நிதியில் கட்டி அர்ப்பணித்தார்.
விழுப்புரம் நகராட்சி 8 வது வார்டுக்கு உட்பட்ட முத்தோப்பு திடீர் குப்பம் பகுதியில் 1000.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நிறைவேற்ற முடியாமல் இருந்ததால் மன வருத்தத்தில் இருந்த அ.தி.மு.க., கவுன்சிலர் பத்மாவதி தனது பதவியை ராஜினாமா செய்து விடலாம் என முடிவு எடுத்திருந்தார். பின், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தால் ஓட்டளித்த மக்களுக்கு செய்யும் துரோகம் என நினைத்து தனது சொந்த பணத்தில் அங்குள்ள மக்கள் சிலரிடம் நிதியுதவியை பெற்று ஊரல்கரைமேடு பகுதியில் சில அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளார். ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் முத்தோப்பு, ஊரல்கரைமேடு பகுதியில் மேம்பாலம், ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் திரு.வி.க., வீதி, மேல் அறிஞர் அண்ணா தெரு, மந்தக்கரை, வாணியர் தெரு பகுதிகளில் சாலை பேட்ச் ஒர்க் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் இரு இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முடிவுற்ற மேம்பாலம் மற்றும் சி.சி.டி.வி., கேமராக்களை கவுன்சிலர் பத்மாவதி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அப்பகுதி மக்கள் பெண் வீர செயலுக்கு கவுன்சிலர் பத்மாவதிக்கு மாலை அணிவித்து உற்சாகப்படுத்தினார் அ.தி.மு.க., நகர செயலாளர் ராமதாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் வழக்கறிஞர் செந்தில், இளைஞரணி செயலாளர் பாஸ்கர், வார்டு நிர்வாகிகள் செழியன், விஜய், வினோத், ஆறுமுகம், முருகன், ஜாகீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
