மதுரையில் த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு: விஜய் நன்றிக் கடிதம்!

மதுரையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, கழகத் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கழகத் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,
“என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். மதுரையில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாடு, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் மிகப்பெரிய வெற்றியாக நடந்தது. இதற்காக கடவுளுக்கும் மக்களுக்கும் கோடானு கோடி நன்றி.

இந்த மாநாடு வெற்றியடையச் செய்தது, ஒவ்வொரு தொண்டர்களின் உழைப்பும் பங்களிப்பும் தான். மாநாடு நடைபெற்ற மதுரையில் கடல்போல் திரண்ட மக்களின் ஆதரவு, நமது அரசியல் மற்றும் கொள்கை பயணத்தை இன்னும் வலுப்படுத்தியுள்ளது. இனி எந்த சமரசமும் இன்றி அந்தப் பயணத்தைத் தொடருவோம்.

மாநாட்டை சிறப்பாக ஒருங்கிணைத்த பொதுச் செயலாளர் மற்றும் அனைத்து நிர்வாகிகள், நகரம் முதல் வார்டு நிலை வரை உழைத்த நிர்வாகிகள், மருத்துவ சேவையை வழங்கிய மருத்துவர்கள் குழு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறை, அரசு அதிகாரிகள், தனியார் பாதுகாப்பு குழுக்கள், ஊடகங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நம்மீது வரும் விமர்சனங்களில் நல்லவற்றை எடுத்துக்கொண்டு வளர்ச்சியாக மாற்றிக் கொள்வோம்; மற்றவற்றை புன்னகையுடன் புறக்கணிப்போம். மக்களோடு மக்களாக இணைந்து நிற்கும் மக்களரசியல் மட்டுமே எங்கள் நிரந்தர அரசியல் நிலைப்பாடு. மக்களாட்சியை நிலைநாட்டுவதே எங்கள் இலக்கு.

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலிலும், 1967 மற்றும் 1977 தேர்தல்களைப் போல மக்கள் நமக்கு வெற்றியை அளிப்பார்கள் என்பது உறுதி. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்”** என்று விஜய் தனது நன்றிக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version