2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய், தனது மூன்றாவது கட்ட பிரச்சாரத்தை இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தொடங்குகிறார்.
முன்னதாக, கடந்த 13ஆம் தேதி திருச்சி மற்றும் அரியலூரில் விஜயின் முதல் கட்ட பரப்புரை நடைபெற்றது. தொடர்ந்து 20ஆம் தேதி நாகை மற்றும் திருவாரூரில் இரண்டாவது கட்ட பரப்புரையில் அவர் ஈடுபட்டார்.
இந்நிலையில், இன்று மூன்றாவது கட்டமாக நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் மக்களை சந்திக்கிறார்.
பரப்புரை அட்டவணை
நாமக்கல் கே.எஸ். திரையரங்கம் அருகே காலை 8.45 மணிக்கு விஜய் தனது உரையை நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் அவர் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் செல்லும் திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவு 10 மணிக்குள் விஜய் சென்னைக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
கட்சி தொண்டர்கள் திரள்வு
விஜயின் பிரச்சாரத்தை முன்னிட்டு தவெகவினர் பெருமளவில் திரண்டுவருகின்றனர். குறிப்பாக நாமக்கல் கே.எஸ். திரையரங்கம் பகுதி முழுவதும் தொண்டர்கள் குவிந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரச்சாரம் ஒழுங்காக நடைபெற காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர். எனினும், இந்த முறை நேரம் தவறாமல் பொதுமக்களைச் சந்திக்க விஜய் உறுதியான திட்டத்துடன் செயல்படுவதாகத் தெரிகிறது.