தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை நாகையில் மேற்கொள்ள இருந்த பொதுக்கூட்டப் பரப்புரைக்கான இடம் திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
முதலில் புத்தூர் ரவுண்டானா பகுதியில் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது. இதற்குப் பதிலாக, புத்தூர் அண்ணா சிலை அருகே மதியம் 12.30 மணிக்கு பரப்புரை நடைபெற அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக 30 நிமிடங்களுக்குள் உரையை முடிக்க வேண்டும் எனவும், விஜய் பயணிக்கும் வாகனத்தை யாரும் பின்தொடரக்கூடாது எனவும் காவல்துறை தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நாளை திருவாரூரிலும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தவெக செயற்பாட்டாளர்கள் ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறை விதித்த முக்கிய நிபந்தனைகள் :
மதியம் 12.25 மணி முதல் ஒரு மணி நேரத்துக்குள் நிகழ்ச்சி முடிக்கப்பட வேண்டும்.
விஜயின் கேரவன் வாகனத்துடன் அதிகபட்சம் 5 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி.
வாகனத்தின் முன், பின் இருசக்கர வாகனம், கார் அல்லது நடந்து செல்ல தடை.
திமுக, அதிமுக அலுவலகங்கள் இருக்கும் சாலையில் பிரச்சனை தவிர்க்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
கூட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கு கட்சி சார்பே தனியாக பார்க்கிங் வசதி செய்ய வேண்டும்.
பெண்கள், முதியவர்கள் பாதுகாப்பு குறித்த முன் ஏற்பாடுகள் கட்டாயம்.
யாரும் கையில் கம்பு, குச்சி போன்றவற்றை வைத்திருக்கக் கூடாது.
அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால், கட்சி பொறுப்பேற்க வேண்டும்.
ரயில் பாதைக்கு அருகில் கூட்டம் நடப்பதால், ரயில் போக்குவரத்துக்கு இடையூறு வரக் கூடாது.
அண்ணா, பெரியார் சிலை தடுப்புகளின் மீது ஏறி பொதுமக்கள் அசௌகரியம் தரக்கூடாது.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிற சாலைகளின் இருபுறங்களிலும் விளம்பர பதாகைகள் வைக்க தடை.
இதனுடன் சேர்த்து மொத்தம் 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
