நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அரசியலில் “ஆஃபர்” அரசியலை மேற்கொள்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பின்னணியில், விஜய் தலைமையிலான தவெக பல அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்குவதாக கூறி கூட்டணிக்காக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்நிலையில், திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், நடிகர் விஜய்யின் அரசியல் அனுபவத்தை கேள்விக்குள்ளாக்கினார். “35 ஆண்டுகளாக அரசியல் கற்றுக் கொண்டவர்களை விட்டு விட்டு, அரசியலில் புதிதாக அடியெடுத்து வைத்துள்ள ஒருவரை தலைவராக ஏற்க முடியுமா? அவர் இன்னும் அரசியலில் ஆரம்ப நிலை, பால்வாடி மாணவர் போன்றவர்” என அவர் விமர்சித்தார்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் விவாதங்களுக்கும், தலைமைத் திறன் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகித்துள்ளதாகக் குறிப்பிட்ட திருமாவளவன், “தமிழக அரசியலில் பேசும் பலர் விசிக பள்ளியில் பயின்றவர்களாகவே இருக்கிறார்கள்” என்றும் தெரிவித்தார். இந்த கருத்துகள், விசிக முன்னாள் நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தவெக கூட்டணி அரசியலை கடுமையாக சாடினார். “தீபாவளி, பொங்கலுக்கு சலுகை அறிவிப்பது போல, தேர்தலுக்காக ஆட்சியில் பங்கு தருவதாக ஆஃபர் கொடுத்து காத்திருக்கிறார்கள். நடிகர் விஜய் மக்கள் செல்வாக்கு கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தாலும், இன்றுவரை ஒரு வலுவான கூட்டணி உருவாகவில்லை என்பதே நிஜம்” என்றார்.
அதேபோல் அதிமுக கூட்டணியையும் விமர்சித்த அவர், “பாமக மீண்டும் இணைந்ததை பெரிதாகக் கூறும் அதிமுக, புதிய கட்சிகளை ஈர்க்க முடியாத நிலையில் உள்ளது. பாமகவுக்குள்ளேயே இன்னும் உள்கட்சி பிரச்சனைகள் தொடர்கின்றன. அதிமுக – பாஜக கூட்டணி அமைப்பதே இப்போது சிக்கலான நிலையில் உள்ளது” எனக் குறிப்பிட்டார். மேலும், திமுக கூட்டணி பலவீனமாக உள்ளது என ஊடகங்கள் தவறான தோற்றத்தை உருவாக்குவதாக குற்றம்சாட்டிய திருமாவளவன், “இது சங் பரிவார்களின் திட்டமிட்ட செயலாகும். தமிழக மக்கள் அரசியல் விழிப்புடன் உள்ளனர். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே ஆட்சியை அமைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்
