“எம்ஜிஆர் போல் மக்களின் தொண்டனாக உருவெடுக்க விஜய் விரும்புகிறார்” – தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பெருமிதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் விஜய், தற்போது அரசியல் தளத்திலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கில் “தமிழக வெற்றிக்கழகம்” என்ற கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தயாராகி வருகிறார்.

அவரது முதல் அரசியல் மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றபோது, “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற முழக்கத்தால் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து மதுரையில் நடந்த இரண்டாவது மாநாட்டில், “அரசியல் எதிரி திமுக – கொள்கை எதிரி பாஜக” என தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்.

தொடர்ச்சியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பூத் கமிட்டி சந்திப்பு போன்ற நிகழ்வுகள் மூலம் தனது கட்சித் தளத்தை வலுப்படுத்திய விஜய், மக்களை நேரடியாக சந்திக்கும் பரப்புரைகளை தொடங்கியிருந்தார்.

கடந்த மாதம் திருச்சி மற்றும் அரியலூரில் முதல் கட்டப் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், அதன் பின்னர் நாகை மற்றும் திருவாரூரில் இரண்டாவது கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மூன்றாவது கட்டமாக நாமக்கல் மற்றும் கரூரில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்ட போது, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.

இந்த விபத்து விஜயின் அரசியல் பயணத்துக்கு சவாலாக இருந்தாலும், தவெக தரப்பு அதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் — விஜயின் தந்தை — தனது மகனின் அரசியல் முயற்சியை எம்ஜிஆர் வழியில் ஒரு “மக்கள் தொண்டனின் பயணம்” எனக் குறிப்பிடுகிறார்.

விகடன் டெலிவிசன் விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், “எம்.ஜி.ஆர் தனக்காக வாழவில்லை. அவர் அரசியலுக்குப் பிறகு எந்த சொத்தும் சேர்க்கவில்லை. அப்படிப்பட்ட தலைவரை நான் மீண்டும் பார்த்ததில்லை.

இன்று ஒருவருக்கு, மக்களுக்காக வாழ வேண்டும், தமிழக வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்ற புனித எண்ணம் இருக்கிறது. அவர் எனது மகன் என்பதில் ஒரு தந்தையாக பெருமை கொள்கிறேன்,” என்று கூறினார்.

அவர் மேலும், “எம்.ஜி.ஆர் போல மக்கள் மனதில் நிலைத்திருக்கும் தலைவராகவும், மக்கள் தொண்டனாகவும் உருவெடுக்க விஜய் விரும்புகிறார். தமிழகத்தின் தலைமகனாக அவன் திகழ்வான்,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Exit mobile version