கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க தவெக தலைவர் நடிகர் விஜய் தயாராகியுள்ளார். இதற்காக அவர் தரப்பில் தமிழ்நாடு டிஜிபிக்கு எழுத்து மூலம் அனுமதி கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
“கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். அந்த குடும்பங்களை விஜய் நேரில் சந்திக்க விரும்புகிறார். இதற்காக நேற்று இ-மெயில் மூலம் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்; இன்று அதை நேரிலும் வழங்க உள்ளோம்,” என்றார்.
அருண்ராஜ் மேலும் கூறுகையில், “பாதிக்கப்பட்டவர்களுடன் விஜய் ஏற்கனவே வீடியோ கால் மூலம் உரையாடினார். கரூரில் உள்ள 33 பேரிடம் நேரடியாக பேசிச் சாந்தனையையும் ஆறுதலையும் தெரிவித்தார். ‘நான் உங்களுடன் இருப்பேன், விரைவில் நேரில் வந்து சந்திப்பேன்’ என்று அவர்களிடம் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒருமித்தமாக ‘சார், உங்க மேல எந்தத் தப்பும் இல்லை, தைரியமா இருங்க, நாங்கள் எப்பவும் உங்க கூட இருக்கோம்’ என்று கூறியதாகவும் அருண்ராஜ் தெரிவித்தார்.
மேலும், “கரூரில் மீண்டும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக முழுமையான பாதுகாப்பு திட்டம் வகுக்க கோரிக்கை வைத்துள்ளோம். இதற்காக டிஜிபி அலுவலகத்துடன் ஒரு ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தவும் கேட்டுள்ளோம்,” என்றார்.
அரசின் விசாரணை தற்போது நடைபெற்று வருவதால், அதைப் பற்றிய கருத்து கூறுவது பொருத்தமல்ல என்றும், உண்மை வெளிப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.