விஜய் தான் முதல்வர் வேட்பாளர்; பாஜக அணியுடன் கூட்டணி இல்லை – தவெக திடமான பதில் !

பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் யாருடனும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி அமைக்காது என, அந்தக் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“மாற்றிப் பேசுவதும் ஏற்றிப் பேசுவதும் எங்களுக்குப் பழக்கமில்லை. கூட்டணி குறித்த கற்பனைகளை புறந்தள்ளி, உண்மையான நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

“தவெக தமிழகத்தின் முதன்மை சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், சிலர் இப்போது எங்களைப் பற்றி தவறான தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள். வெற்றித் தலைவர் விஜயின் எழுச்சி மற்றும் கருத்துக்கணிப்புகளில் அவருக்குக் கிடைத்த ஆதரவை பார்த்து, ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகள் பதறிய நிலையில் உள்ளன. அதனை மறைக்க, இப்போது ஆளுக்கொரு கற்பனைக் கூட்டணி கதையுடன் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்,” என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதே நேரத்தில், “எங்கள் கட்சியின் செயற்குழு தீர்மானத்தின் படி, எங்கள் ஒரே முதல்வர் வேட்பாளர் வெற்றித் தலைவர் விஜய் அவர்கள்தான். மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை இணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் நிரந்தர எதிரி பாஜகவோடு கூட்டணி வைத்திருப்பவர்களுடன் இணைவது எங்களின் கொள்கைக்கு முரணாகும்,” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“வெற்றித் தலைவர் எதுவும் சொன்னால், அதையே நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் நெறியாள்படும் வீரர்கள் தான் எங்களுடைய ஒவ்வொருவரும். அவர் எடுத்த முடிவுகளில் எந்தவொரு சமரசமும் கிடையாது. இதுவே எங்கள் உண்மை வரலாறு,” என்றும் ராஜ்மோகன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version