“விஜய் வேட்டையாட வரும் சிங்கமல்ல ; வேடிக்கை காட்ட வரும் சிங்கம்” – சீமான் விமர்சனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்-தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராமநாதபுரம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் சீமான். அப்போது பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் பாமகவில் இருந்தவன். இது பெரிய பிரச்சனை கிடையாது. இருவரும் சேர்ந்து பேசி சரிசெய்துக் கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து திமுக அரசை குறிவைத்து பேசிய அவர், “பள்ளிக் குழந்தைகளை பசியோடு பள்ளிக்கு வர வைத்ததுதான் திமுக அரசின் சாதனை. இலவசங்களை கொடுத்து மக்களை கையேந்தும் நிலைக்குக் கொண்டுவந்த முதலமைச்சர் ஸ்டாலின், மக்களைத் தலை நிமிர வைப்பேன் என்று கூறுவது சாதனை அல்ல, வேதனை” என்று விமர்சித்தார்.

விஜயின் அரசியல் குறித்து கடுமையாக விமர்சித்த சீமான், “ரோடு ஷோ, கூட்டு ஷோ நடத்துவது மக்கள் சந்திப்பு அல்ல. மக்களிடம் நேரடியாகச் சென்று நிற்பதுதான் உண்மையான மக்கள் சந்திப்பு. ஒரு நட்சத்திரப் பிரபலம் என்றால் வாக்குகள் மட்டும் கேட்க வருவீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், “விஜய் வேட்டையாட வரும் சிங்கமல்ல; வேடிக்கை காட்ட வரும் சிங்கம். 2026 தேர்தலில் வாக்குகள் எண்ணும் போது விஜயின் உண்மையான செல்வாக்கு தெரிய வரும்” என சவால் விடுத்தார்.

Exit mobile version