சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் “கொடூர குணம் கொண்ட விஜயினிடம்” சிக்கியுள்ளதாக திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் அருள்மொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் நடத்திய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்குப் பிறகு விஜய் உடனடியாக தனியார் விமானத்தில் சென்னைக்கு திரும்பியதாகவும், பின்னர் பல மணி நேரங்களுக்கு பிறகே குறுகிய இரங்கல் செய்தி வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அடுத்து மூன்று நாட்கள் கழித்து விஜய் வெளியிட்ட வீடியோவும் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் உயிரிழந்தோர் குறித்து எந்தவொரு வருத்தமும் தெரிவிக்காமல், “சிஎம் பழிவாங்க விரும்பினால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்ற வகையிலான கருத்துகளை விஜய் முன்வைத்தார்.
இந்த நிலையில் வழக்கறிஞர் அருள்மொழி தெரிவித்துள்ளார்:
“விஜய்யின் பேச்சில் எந்தவொரு பரிதாபமும் இல்லை. இது முழுவதும் ஒத்திகை பார்த்து, வசனம் எழுதப்பட்டு பதிவு செய்யப்பட்ட வீடியோவாக தெரிகிறது. உயிரிழந்த 41 பேரைப் பற்றிய கவலை இல்லாமல், ‘நாங்கள் திரும்பி வருவோம், பழிவாங்குவோம்’ என்ற வார்த்தைகளை பயன்படுத்துவது ஆபத்தான சிக்னல்.
எப்படி ‘ப்ளூ வேல்’ என்ற ஆபத்தான கேமில் குழந்தைகள் சிக்கினார்களோ, அதுபோலவே இளைஞர்கள் தற்போது ஆபத்தான மனிதரிடம் சிக்கியுள்ளனர். விஜயின் பின்னால் யார் உள்ளனர், அவரை யார் இயக்குகின்றனர் என்பதுதான் கேள்வி. இந்த சூழ்நிலையை தவெகவும், பாஜகவுமே அரசியல் விளையாட்டாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன,” என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், விஜயின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தீவிரமாக கேள்வி எழுப்பி வருகின்றன.