பெரம்பலூர்: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பலூர் மாவட்டத்தில் 13 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தல் பிரச்சாரத்திற்காக கேட்ட இடத்திலிருந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை மாற்று இடத்தில் பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள அனுமதிக்குள், குன்னம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பிரச்சாரம் நடத்தலாம். ஆனால், பெரம்பலூர் நகரில் காமராஜர் வளைவு பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாற்றாக, துறையூர் சாலையில் மேற்கு வானொலித் திடல் பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், அரசின் விதிமுறைகளை பின்பற்றி பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது, போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது, பட்டாசு வெடிக்க கூடாது, விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் வைக்க அனுமதி பெற வேண்டும், கட்சியின் வருமானிகள் மற்றும் வாகன விவரங்களை காவல்துறைக்கு முன்பே அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக வெற்றி கழகத்தின் மாநில வழக்கறிஞர் அரவிந்தன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பாலபரணி உள்ளிட்ட நிர்வாகிகள், இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
