புதுடில்லி: ஜக்தீப் தன்கர் ராஜினாமா காரணமாக நாளை நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலை, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்ட்ரீய சமிதி மற்றும் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஆகியவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன.
இந்த தேர்தல் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. அதன் பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். தேர்தலில் ஆளும் தேஜ கூட்டணியைச் சேர்ந்த மஹாராஷ்டிரா ஆளுநரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் இண்டி கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்.
ஒடிசா:
பிஜூ ஜனதா தளம் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் சஸ்மித் பத்ரா கூறியதாவது:
“நவீன் பட்நாயக் ஆலோசனையின் பேரில், இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் தேஜ கூட்டணி, இண்டி கூட்டணிகளுக்கு சம தூரத்தில் இருப்பதை வலியுறுத்துகிறோம். எங்கள் கவனம் மாநில வளர்ச்சியிலேயே இருக்கிறது.” என தெரிவித்தார்.
தெலுங்கானா:
பாரதீய ராஷ்ட்ரீய சமிதி கட்சியும் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமாராவ் கூறியதாவது:
“தெலுங்கானாவில் கடுமையான உரத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் புறக்கணித்து வருகின்றன. இதனை கண்டித்து துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கிறோம். இதில் நோட்டா இருந்திருந்தால், அதற்கு வாக்களித்திருப்போம்.” எனக் கூறினார்.