இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. அதன் பிறகு, நடிகர் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்கும் பணிகள் தொடர்ந்தன. ஆனால், சில காரணங்களால் அந்த படம் தாமதமாகிவிட்டதால், இடைவேளையில் சிம்புவை வைத்து வேறு ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இது, ‘வடசென்னை’ திரைப்படத்தின் தொடராக இருக்கலாம் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின. அந்தப் படத்தின் புரோமோ ஷூட்டிங் சென்னை நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சிம்பு கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
இந்தக் கதையின் நிழலில், வடசென்னை திரைப்பட உரிமையை வைத்திருக்கும் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் தனுஷுடன் வெற்றிமாறனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியானது. இதற்கிடையே, இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோவில் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது :
நான் இயக்க உள்ள புதிய திரைப்படம் சிம்புவை முன்னணி கதாப்பாத்திரமாகக் கொண்டு வடசென்னை டைம்லைனில் நடைபெறும் ஒரு கதை. வடசென்னை திரைப்படத்தின் கதைக்கும், கதாப்பாத்திரங்களுக்கும் உரிமையாளர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம். எனவே, இதைப்பற்றி தனுஷிடம் நேரில் பேசினேன்.
அப்போது, இந்தக் கதையை வடசென்னை பட உலகத்தில் இயக்க விரும்புகிறேன். இல்லையெனில், தனி திரைப்படமாக இயக்குவேன். தீர்மானம் உங்கள் கையில் என கூறினேன்.
அதற்கு தனுஷ், ‘உங்களுக்கு எது சரியாக இருக்குமோ அதைச் செய்யுங்கள். அதற்காக எனக்கு ஒரு பைசா கூட தேவையில்லை’ என்றார்.
தனுஷையும், என்னையும் பற்றிய தவறான தகவல்களை யூடியூப்பில் காணும்போது வருத்தமாக உள்ளது. எங்களுக்குள் உள்ள உறவை, ஒரு படம் அல்லது ஒரு நிலைமையால் குலைக்க முடியாது. சிம்புவுக்கும், படத்திற்க்கும் என்ன சரியாக இருக்குமோ அதை செய்யுங்கள் என கூறியுள்ளார்.
என்னை யாரும் வற்புறுத்த முடியாது. இணையத்தில் பரப்பப்படும் அனைத்தும் வெறும் வதந்திகள் தான், எனக் கூறியுள்ளார்.